~ sகுமார் கம்ப்யூட்டர் டிப்ஸ் ~

 

நோக்கியா: வளர்ச்சியும் வீழ்ச்சியும்

மொபைல் போன் உலகில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா 
மன்னனாக திகழ்ந்த நோக்கியா நிறுவனத்தை, சாப்ட்வேர் தொழிலில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் மைக்ரோசாப்ட் 720 கோடி டாலர் (சுமார் ரூ.48,000 கோடி) கொடுத்து சொந்தமாக்கியுள்ளது. பின்லாந்து நாட்டை தலைமையகமாக கொண்ட நோக்கியா நிறுவனம் எவ்வளவு வேகத்தில் சிகரத்தை எட்டியதோ அதே வேகத்தில் யாரும் எதிர்பாரத வகையில் பெரும் சரிவையும் சந்தித்துள்ளது. இதன் பின்னணியை ஆராயும்போது கிடைக்கும் தகவல்கள் சுவாரசியமானவை.


வர்த்தக ரீதியில் மொபைல் போன்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் நோக்கியா. அதன் தயாரிப்புகள் எளிதில் கையாளும் வகையிலான வடிவமைப்பையும் இயக்கத்தையும் கொண்டிருந்தது. முக்கியமாக நோக்கியா போன்களின் ரகங்களும் விலையும் அவரவர் வசதிக்கு தேர்ந்தெடுக்கும் விதத்தில் இருந்தன. 1990களில் நோக்கியாவுக்கு போட்டியாக பெரிய நிறுவனம் எதுவும் இல்லை. செல்போன் கடைக்கு செல்பவர்கள் பிராண்ட் பெயரை சொல்லாமலே 3210  கொடுங்கள், 1100 இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு நோக்கியா மாடல்கள் பிரபலமாயின. 2000ம் ஆண்டில் 3310/3330 மாடல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. அந்த இரு மாடல்களும் சுமார் 13 கோடி விற்பனை ஆயின என்றால் பாருங்கள்.

ஸ்மார்ட்போன் அறிமுகமான நேரத்தில் 2002ல் 3650 என்ற மாடல் விற்பனைக்கு வந்தது. செம்பியன் சீரிஸ்60 வரை வந்தது. ஆனால், வட்டவடிமான கீபேடு மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. 2003ல் நோக்கியாவின் முதலாவது 3ஜி மொபைல்போன் (7600 மாடல்) அறிமுகம் ஆனது. இது பேஷன் சீரிஸில் ஒரு பகுதி. ஆனால், இதன் வடிவமைப்பு எடுபடவில்லை. இதேபோல் 2003ல் வந்த என்,கேஜ் மாடலும் கைகொடுக்கவில்லை. குறைந்த அளவு கேம்ஸ், டல்லான வடிவமைப்பு மக்களை கவரவில்லை.   
    
உச்சத்தில் இருந்த நோக்கியாவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாறிக் கொண்டே இருந்தது. எளிமையான கையால்தல் மட்டுமே செல்போனின் இலக்கணம் ஆகாது என்று உணர்த்தும் வகையில் அழகான, கவர்ச்சியான, புதுமையான செல்போன் மாடல்களை சந்தைக்கு கொண்டு வர தொடங்கியது தென்கொரியாவின் சாம்சங். 2007ல் ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது. 

யாரும் தொட முடியாத சந்தைப் பங்கு இருந்ததால் விளம்பரம் செய்வதிலும் நோக்கியா ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சாம்சங்கும் ஆப்பிளும் புதிய விளம்பர உத்திகளை கையாண்டன. அதையடுத்து, 2007ல் ஸ்மார்ட்போன் சந்தையில் 49.4 சதவீதமாக இருந்த நோக்கியாவின் ஆதிக்கம், அடுத்த ஆண்டுகளில் 44, 41, 34 என்று தொடர் சரிவை சந்தித்தது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதல பாதாளத்தில் விழுந்து 3 சதவீதம் ஆனது.

நேர்த்தியான செல்போன் தயாரித்த நோக்கியாவால், போட்டியாளர்கள் அளவுக்கு வேகமான இயக்க முறை மென்பொருளை இணைத்து அளிக்க இயலவில்லை. சாப்ட்வேரில் கவனம் செலுத்த தவறியதால் ஹார்ட்வேர் முக்கியத்துவம் இழந்து பின்தங்கியது. எனவே, 3ஜி உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப செல்போன்களை வாங்க விரும்பிய மக்கள், நோக்கியா பக்கம் திரும்பவில்லை. 

டுயல் சிம் எனப்படும் இரட்டை சிம் கார்டு போன்களை மக்கள் விரும்பி வாங்குவது தெரிந்தும் நோக்கியா சமீபகாலம் வரை அதில் ஆர்வம் காட்டவில்லை. மக்களின் விருப்பங்களும் தேவைகளும் மாறி வருவதை நோக்கியா உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டது. அந்த சூழ்நிலையில், 2011ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா தனது போன்களில் ஆபரேடிங் சிஸ்டமாக அறிமுகம் செய்தது. 

எனினும், கூகுள் நிறுவனத்தின் இலவச ஆபரேடிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்பாடு அதற்குள் மிக உயர்ந்த இடத்தை தொட்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆப்பிளின் ஐஓஎஸ் ஆபரேடிங் சிஸ்டமும் தனிப்பெயர் பெற்றிருந்தது. எனவே, இழந்த சந்தைப் பங்கை நோக்கியா மீட்க முடியவில்லை.  

இந்த நேரத்தில் நோக்கியாவின் புதிய தயாரிப்புகளான லூமியா போன்கள் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் சிறப்பாக செயல்படுவதாக தகவல் பரவி பல நாடுகளிலும் விற்பனை விறுவிறுப்பானது. அதை தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தை கையகப்படுத்தும் யோசனைக்கு மைக்ரோசாப்ட் வடிவம் கொடுத்தது. ஹார்டுவேர், சாப்ட்வேர் இணையும் பந்தம் இருவருக்கும் நன்மை தரும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் நம்புகிறார்.

வரலாறு திரும்புகிறது

முக்கிய நிகழ்வுகள் பலவற்றுக்கு அற்ப விஷயங்கள் காரணமாக இருந்ததை வரலாற்றில் பார்க்கலாம். வெறும் 5 ஷில்லிங் நாணயத்துக்காக தொடங்கிய பயணம் கிரேட் பிரிட்டனுக்கு உலகின் மிகப்பெரிய காலனி ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அப்போது வாசனைத் திரவிய வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய டச்சு வியாபாரிகள் மிளகின் விலையை ஒரு பவுண்டுக்கு 5 ஷில்லிங் உயர்த்தினர். இதை அநியாயம் என்று லண்டன் வியாபாரிகள் கருதினர். 

அவர்களில் 24 பேர் ஒரு மாளிகையில் கூடினர். அது 1599 செப்டம்பர் 24.  125 பங்குதாரர்களை சேர்த்து 72,000 பவுண்ட் மூலதனமாக போட்டு கம்பெனி  ஆரம்பித்தனர். கிழக்கிந்திய கம்பெனி. அதன் முதல் கப்பல் 1600ல் இந்திய கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சியது. மன்னர் ஜஹாங்கீர் தன் தர்பாரில் ஆங்கிலேய வியாபாரிகளை வரவேற்றார். அன்று விழுந்த விதை இந்தியாவை 340 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்தும் அளவுக்கு வளர்ந்தது வரலாறு.

2010ல் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி எலூப் பதவி விலகினார். நோக்கியா நிறுவனத்தில் சேர்ந்தார். நோக்கியாவுக்கு மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் சப்ளை தொடங்கியது. நோக்கியா நிர்வாகத்தில் பல மாற்றங்களை எலூப் கொண்டுவந்தார். 65 ஆயிரம் ஊழியர்கள் இருந்தனர். இரண்டு ஆண்டுகளில் பாதிப்பேரை வெளியேற்றினார். இதே காலகட்டத்தில் நோக்கியா போன்களின் விற்பனை தரைமட்டம் ஆனது. இழப்பு அதிகரித்தது. இதையடுத்து, நிறுவனத்தை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. எலூப் மீண்டும் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது.

Thanks Dinakaran.....

பிரவுசர் சந்தையில் கூகுள் குரோம் முதலிடம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரவுசர் உலகில் நுழைந்தது குரோம் பிரவுசர். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம்.
ஆறே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாளாராய் கூகுள் நின்றது. தொடர்ந்து குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அண்மையில், இணைய செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) குரோம் பிரவுசர் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதுவும் மிக அதிகமான எண்ணிக்கை வித்தியாசத்தில் இந்த முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் மாதம் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, குரோம் உலகாளவிய அளவில், 43 சதவீத இணையப் பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 25 சதவீத வாடிக்கையாளர்களையே, தன்னிடத்தில் வைத்துள்ளது. பயர்பாக்ஸ், ஏறத்தாழ 20 சதவீதம் பேருக்கே சேவை செய்து வருகிறது. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில், சபாரி மற்றும் ஆப்பரா உள்ளன. 
குரோம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஸ்டேட் கவுண்ட்டர் கண்டறிந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கலாம். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தரும் பிரவுசரை அதிகம் பயன்படுத்துவோர் வர்த்தக நிறுவனங்களே. வார இறுதி நாட்களில் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நிச்சயம் குறைவாகவே தான் இருக்கும். இவர்களும், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் எனச் சென்றால், மைக்ரோசாப்ட் பிரவுசரின் பயனுறைநாள் எண்ணப்படும் காலம் விரைவில் வரும். 
குரோம் பிரவுசர் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தது எவ்வாறு என அறிய சிலருக்கு ஆவலாக இருக்கலாம். மைக்ரோசாப்ட் இந்த பிரிவில், யாரும் போட்டிக்கு வர முடியாத நிலையில் இருந்து வந்தது. சற்று வேகமும், நான் எண்ணுகிறபடி வளைக்கக் கூடிய யூசர் இண்டர்பேஸ் அமைந்த பிரவுசரை மக்கள் தேடிய போது, பயர்பாக்ஸ் கிடைத்தது. ஆனால், குரோம் வந்த பின்னர், அதுவும் மாறியது. மொபைல் சாதனங்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்புடன் கிடைக்கப்பெற்ற குரோம் பிரவுசரை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியதால், குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்ந்தது. இதனுடன் வேகம், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பிற்கேற்ப தரப்படும் வசதிகள், குரோம் பிரவுசருக்கு இந்த இடத்தைக் கொடுத்துள்ளன.


ஒரு மாதத்தில் அதிகம் வாசித்த பதிவுகள் - 21/7/2013

21/7/2013

25 கோடி வாடிக்கையாளருடன் வாட்ஸ் அப்


இணையத்தில் மெசேஜ் அனுப்பிப் பெறுவதில் மிக வேகமாக இயங்கும் வாட்ஸ் அப் (WhatsApp) அமைப்பில், 25 கோடி பயனாளர்கள் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக 25 கோடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் 20 கோடி பேர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளது. எனவே ஆன்லைன் மெசேஜ் சேவையில், அதிக எண்ணிக்கையுடன் செயல்படும் வாடிக்கையாளர்களைக் கொண்ட சேவையாக வாட்ஸ் அப் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்கைப் தளத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாகும். வாட்ஸ் அப் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளே ஆவதால், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.
வாட்ஸ் அப் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கிடைக்கிறது. நன்றாகவும் செயல்படுகிறது. நோக்கியாவின் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் கூட வாட்ஸ் அப் வசதி இயங்குகிறது. எந்தவித சிரமமும் இன்றி, இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை இணைத்து அனுப்புவது மிக எளிதான ஒன்றாகும். ஸ்மார்ட் போன் விற்பனை உலகளாவிய அளவில், குறிப்பாக இந்தியாவில், பெருகி வருவதால், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகிட வாய்ப்புகள் உள்ளன.

விண்டோஸ் 8 ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்


விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுதுமாறு, மென்பொருள் வல்லுநர்களுக்கு, முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினைத் தன் விண்டோஸ் 8 ஸ்டோர் தளத்தில் பதிந்து கொண்டு வழங்க அனுமதித்தது. சில நாட்களுக்கு முன், இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்கள் இவ்வளவு விரைவில், இந்த எண்ணிக்கையை அடையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் ஸ்டோர் திறக்கப்பட்டு எட்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை அடையப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை அடைய ஓர் ஆண்டுக்கும் மேலானது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு அதற்கும் மேல் ஆனது. 
ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான ஸ்டோரில் தற்போது 8 லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு மேலாக உள்ளது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள் ஐ பேட் சாதனத்திற்கானதாகும். இதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களும் மிக அதிகமாகும். 
எந்த வகையில் பார்த்தாலும், விண்டோஸ் ஸ்டோர் பெற்ற இந்த ஒரு லட்சம் புரோகிராம்கள் ஒரு பெரிய சாதனைதான். மைக்ரோசாப்ட் நிறுவன சரித்திரத்தில் இது என்றும் பேசப்படும்.நாளொன்றுக்கு சராசரியாக 600க்கும் மேற்பட்ட புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் விண்டோஸ் ஸ்டோர் தளத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால், மைக்ரோசாப்ட் வெற்றியில் இது ஒரு பகுதிதான்.
டெஸ்க்டாப் சிஸ்டம் என்று வருகையில், இன்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தினை யாரும் நெருங்க முடியவில்லை. 91 சதவீதப் பங்கினை இந்தப் பிரிவில் மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் 83 சதவீத இந்திய India மாணவர்கள்



இணையற்ற ஒரு தொழில் நுட்ப புரட்சியில், அதனால் ஏற்படும் மாற்றங்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும்
பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15 கோடியை எட்டியுள்ளது. சீனா (57.5 கோடி) அமெரிக்காவினை (27.4 கோடி) அடுத்து, மூன்றாவதான இடத்தை இந்தியா எட்டியுள்ளது. அண்மையில் டாட்டா கன்சல்டன்சி சேவை (டி.சி.எஸ்.) நிறுவனம், 17 ஆயிரம் மாணவர்களுக்கும் மேலானவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுக@ள இங்கு தரப்படுகின்றன. இந்திய மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில், நான்கில் ஒருவர், தங்கள் மொபைல் போன்களில், இன்டர்நெட் பிரவுஸ் செய்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் 1 முதல் 2 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். 72 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன் வழி இணையப் பயன்பாடு, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால், சிறிய நகரங்களில், இணைய இணைப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பதால், அங்கு வசிக்கும் மாணவர்கள், இன்னும் இன்டர்நெட் மையங்களிலேயே இணையத் தேடலை மேற்கொள்கின்றனர். சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இயங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வி கற்றுத் தரும் முறையினை, டிஜிட்டல் மயமாக மாற்றினாலும், 83 சதவீத மாணவர்கள் இணைய உலாவிற்கு வீடு அல்லது இன் டர்நெட் மையங்களையே விரும்புகின்றனர்.
இது இன்டர்நெட், மொபைல் மற்றும் சமுதாய இணைய தளங்களின் காலமாக மாறிவிட்டது. மாணவர்கள் உட்பட, பலரும் மக்களைச் சந்திக்கும் இடமாக, சமுதாய இணைய தளங்கள் மாறி வருகின்றன. ஒவ்வொரு சமுதாய இணைய தளமும் அதன் தன்மைக்கேற்ப, தன் மக்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 83.38 சதவீத மாணவர்கள் பேஸ்புக் இணைய தளத்தில் தங்களைப் பதிந்துள்ளனர். இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற சமூக இணைய தளங்களான ட்விட்டர், லிங்க்டு இன் மற்றும் ஆர்குட் போன்றவை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. இருப்பினும் லிங்க்டு இன் போன்ற தளங்கள், மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்கையில், மெட்ரோ மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களின் மன நிலையையும் விரும்பும் விஷயங்களையும் அறிய முடிகிறது.
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களையே தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள, 73.68 சதவீத இந்திய மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது மின் அஞ்சல் பயன்பாடு, இதனால் தொடர்ந்து குறைந்து வருகின்றது.
பத்தில் நான்கு மாணவர்கள் இணையம் வழி பொருட்கள் வாங்குவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். கிரெடிட் கார்ட் மட்டுமின்றி, டெபிட் கார்ட், நெட் பேங்கிங், பொருள் வழங்கும்போது பணம் எனப் பல வசதிகளை ஆன்லைன் ஷாப்பிங் மையங்கள் அளிப்பதால், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால், இந்திய மாணவர்களிடையே எந்த எந்த பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கும் பழக்கம் உள்ளது என்பதனைப் பார்க்கையில், அது இடத்திற்கேற்ற வகையில் வேறுபடுகிறது. மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவது திரைப்படங்களுக்கான அனுமதிச் சீட்டுகளே. 61.71 சதவீத இந்திய இணைய மாணவர்கள், திரைப்பட டிக்கட்களை இணையம் வழியாகவே வாங்குகின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், மெட்ரோ நகர மாணவர்களைக் காட்டிலும், சிறிய நகரங்களில் வாழும் மாணவர்களே, அதிகம் டிக்கட்களைப் பெறுகின்றனர். அடுத்ததாக, இணையத்தில் மாணவர்கள் அதிகம் வாங்குவது டிவிடி/ நூல்கள் மற்றும் மியுசிக் சாதனங்களே. இதனை அடுத்து வருவது விமான மற்றும் ட்ரெயின் டிக்கட்களாகும்.
இந்திய மாணவர்கள் இணையத்தில் அதிகம் மேற்கொள்ளும் செயல்பாடு எது? 74 சதவீத மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த ஆய்வு குறித்த தகவல்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 62.35 சதவீத மாணவர்கள் இணையம் வழி அரட்டை, வலைமனை வழி தகவல் பரிமாற்றம், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
49.10 சதவீத மாணவர்கள் மின் அஞ்சலுக்கும், 45.47 சதவீத மாணவர்கள் இசை சார்ந்த கோப்புகளை டவுண்லோட் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், டாட்டா கன்சல்டன்சி நிறுவனம், டி.சி.எஸ். ஜென் ஒய் சர்வே 2012 என்ற தலைப்பில், இந்தியாவின் 12 நகரங்களில், 17,478 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்விலிருந்து அறியப்பட்ட தகவல்களாகும். இந்த ஆய்வு, ஆகஸ்ட் 2012 முதல், டிசம்பர் 2012 வரை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1660 பள்ளிகளில் படிக்கும் 12 முதல் 18 வயதான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்!


இன்றைய கம்ப்யூட்டர்களின் தொடக்க காலத்தில், மவுஸ் உட்பட பல்வேறு சாதனங்களை வடிவமைக்கக் காரண கர்த்தாவாக இருந்த எங்கல்பர்ட் (Doug
Engelbart), சென்ற ஜூலை 2ல், தன் 88 ஆவது வயதில் மரணமடைந்தார். 1950 முதல் 1960 வரை, "கம்ப்யூட்டர் உலகின் தீர்க்கதரிசி" எனப் பாராட்டும் புகழும் பெற்றவர் எங்கல்பர்ட். மனிதனின் நுண்ணறிவை வளப்படுத்துவதில், கம்ப்யூட்டர் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்ளும் எனவும், உலகப் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, அவற்றிற்குத் தீர்வு காண கம்ப்யூட்டர் பயன்படும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் அவர்.
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பேசப்படும் ஹைப்பர் டெக்ஸ்ட், ஸ்கிரீன் பகிர்மாணம், பல விண்டோ செயல்பாடு, வீடியோ டெலி கான்பரன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் துணை சாதனமாக மவுஸ் -- ஆகியவற்றைக் கொண்டு வர முழு முதற் காரணமாக இருந்தது எங்கல்பர்ட் மேற்கொண்ட ஆய்வுகளே. 
அவர் கண்டுபிடித்து வடிவமைத்த மவுஸ், கம்ப்யூட்டரின் பயன்பாட்டினையே மாற்றி அமைத்தது. 1960 ஆம் ஆண்டு மவுஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய எங்கல்பர்ட், 1963ல் அதனை வடிவமைத்தார். 1968ல், சான் பிரான்சிஸ்கோவில், முதல் முதலாக, பொதுமக்களுக்கு மவுஸினை இயக்கிக் காட்டினார். அப்போதே, வீடியோ டெலி கான்பரன்சிங் என்பதை நடத்திக் காட்டினார். அதுவே, இன்டர்நெட்டின் அடிப்படையாக அமைந்தது. 
1970ல் மவுஸ் சாதனத்திற்கான வடிவமைப்பு உரிமையைப் பெற்றார். தொடக்கத்தில், மரத்தாலான ஷெல் ஒன்றில், இரு உலோக உருளைகளை அமைத்து மவுஸ் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக, இன்றைய வடிவமைப்பினைப் பெற்றது. 
இதன் பயனைப் பலமுறை அவர் விளக்கிக் காட்டினாலும், 1984ல் ஆப்பிள் நிறுவனம் தான் முதன் முதலில் வர்த்தக ரீதியாக மவுஸை மக்களிடம் கொண்டு சேர்த்தது. 1987 ஆம் ஆண்டில் மவுஸ் வடிவமைப்பு உரிமை காலம் காலாவதியானதால், பொது பயன்பாட்டு சாதனமாக மவுஸ் மாறியது. மவுஸுக்கான எந்த ராயல்டி உரிமைப் பணமும் எங்கல்பர்ட் பெற்றதே இல்லை. 1980 ஆம் ஆண்டு மத்தியிலேயே, நூறு கோடி மவுஸ் புழக்கத்தில் இருந்தது என்றால், அவர் எவ்வளவு தொகையை விட்டுக் கொடுத்துள்ளார் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு இதன் வடிவமைப்பினை வழங்கிய ஸ்டான்போர்ட் ஆய்வு மையம், இதற்கென 1983ல், 40 ஆயிரம் டாலர் பணம் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இவருக்கென ஓர் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, பல ஆய்வுகளை அதில் இவர் மேற்கொண்டார். இன்றைய இன்டர்நெட் வடிவமைப்பின் முன்னோடியான ஆர்பா நெட் (ARPANET) அமைப்பினை வடிவமைப்பதில் பெரும் பங்கு கொண்டார். அப்போதே, மின் அஞ்சல், வேர்ட் ப்ராசசிங் ஆகிய பிரிவுகளில், முன்னோட்டமான கருத்துகளையும் செயல்முறைகளையும் வழங்கினார். கம்ப்யூட்டர் ஒன்று பெரிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு, தகவல்கள் மிகப் பெரிய துளையிட்ட அட்டைகள் வழியாகத் தரப்பட்டுச் செயல்பட்ட காலத்தில், அவர் வழங்கிய ஆய்வு இலக்குகள் எல்லாம், மிக மிக முன்னேறிய ஒரு காலத்தில் தான் வர முடியும் என உடன் இருந்தவர்கள் அப்போது கூறினார்கள். இன்று அவை நடைமுறையில் இருப்பதைக் காண்கையில் அவரை "கம்ப்யூட்டிங் தீர்க்கதரிசி" என அழைத்தது சரிதான் என்று கொள்ள வேண்டும். 
கம்ப்யூட்டர் மற்றும் மனித நுண்ணறிவு வளம் குறித்து 25 நூல்களை இவர் எழுதினார். 20 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையினைப் பெற்றிருந்தார்.
1997ல், எம்.ஐ.டி. பல்கலை, இவருக்கு விருதாக 5 லட்சம் டாலர் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டிங் பிரிவில் சில அடிப்படைகளை வடிவமத்ததற்காக, தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது (National Medal of Technology) 2000 ஆண்டில் வழங்கப்பட்டது.
மனிதன் மற்றும் கம்ப்யூட்டர் இடையே ஓர் அருமையான உறவினை ஏற்படுத்தக் காரணமாக இருந்ததற்காகவும், மவுஸினை சிறந்த உள்ளீடு சாதனமாக அமைத்ததற்காகவும், கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம், இவருக்கு 2005 ஆம் ஆண்டில், பெல்லோஷிப் விருதினை வழங்கி கவுரவித்தது

விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் - part 2

6. ஸ்டார்ட் அப் மேனேஜர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய டூலாக ஸ்டார்ட் அப் மேனேஜர் (Startup Manager) தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டர்
இயங்கத் தொடங்கியவுடன், செயல்படத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலைப் பெற்று, அவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை நீக்கிவிடலாம். இதற்கு முன் வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், எம்.எஸ். கான்பிக் டூல் மூலம் நாம் இந்த பணியினை மேற்கொண்டு 
வருகிறோம். இந்த வேலையை, மேலே குறிப்பிட்ட சிகிளீனர் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
7. மல்ட்டிபிள் மானிட்டர் டூல்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை இணைத்து இயக்கும் வசதி தரப்பட்டுள்ளது. மற்ற சிஸ்டங்களில், இதற்கென வேறு நிறுவனங்களின் புரோகிராம்களையே பயன்படுத்த வேண்டும். தற்போது இது சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்தே கிடைக்கிறது.
8. பைல் காப்பி: விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டம் பதிப்புகளில், பைல்களைக் காப்பி செய்வதில் கூடுதல் வசதிகளுக்கு, டெரா காப்பி (Tera Copy) என்ற புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், ஒரு பைல் காப்பி செய்யப்படுவதனை, இடையே நிறுத்தி தொடரலாம். மேலும் பல செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் டூல் (முன்பு விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைக்கப்பட்டது), இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் வசதியைத் தருகிறது.
9. டாஸ்க் மேனேஜர்: விண்டோஸ் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டூலுக்குப் பதிலாகத் தற்போது Process Explorer என்ற கூடுதல் செயல்பாடுகளைத் தரும் டூல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பைலும் எப்படி தொடர்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளன என்பதனை, மரக்கிளைகள் கொண்ட பட அமைப்பு மூலம் காட்டுகிறது. கூகுள் குரோம் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகையில், இது நமக்கு கூடுதல் தகவல்களைத் தருவதாக அமைகிறது.
10. பி.டி.எப். பைல் ரீடர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒரு பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது பி.டி.எப். எக்ஸ்சேஞ் வியூவர் போன்ற மற்ற பி.டி.எப். ரீடர் புரோகிராம்களைப் பதிந்து பயன்படுத்தத் தேவை இல்லை. மேலும், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களிலும் இது போன்ற பி.டி.எப். ரீடர்கள் இணைந்து தரப்பட்டுள்ளதால், அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
11. விர்ச்சுவல் மெஷின்: இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கு இடையூறு தராமல், வேறு ஒரு சிஸ்டம் அல்லது புரோகிராம் இயக்கிப் பயன்படுத்த, விர்ச்சுவல் மெஷின் எனப்படும் டூல் தேவைப்படுகிறது. இதுவரை, இதனைப் பெற, விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம்.வேர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி வந்தோம். இவற்றிற்குப் பதிலாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் HyperV என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, உபுண்டு போன்ற புரோகிராம்களை இயக்கலாம்.
12. பேக் அப் டூல்ஸ்: மிக நவீன பேக் அப் டூல்ஸ்களை விரும்புபவர்கள், விண்டோஸ் அல்லாத வேறு நிறுவன டூல்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இத்தகைய டூல் கிடைக்கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் அண்ட் ரெஸ்டோர் வசதி என இது தரப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி பைல் ஹிஸ்டரி (File History) எனத் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் டூல்ஸ் மூலமும் இந்தப் பணியினை மேற்கொள்ளலாம்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இணைக்கப் பட்டிருந்தாலும், பயனாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, அல்லது பிற நிறுவனங்களின் இணையான புரோகிராம்கள் அளவிற்கு, இவை அதிக வசதிகளைத் தராதவையாக இருக்கலாம். எனவே, கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், தர்ட் பார்ட்டி புரோகிராம்களையும் பயன்படுத்தலாம்.

விண்டோஸ்8 : உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் 3.7.2013

விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் இயங்கத் தொடங்கியவுடன், பிற நிறுவனங்கள், இதில் இயங்கும் வகையில் தயாரித்து வெளியிட்டுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்களை நாம் பதிந்து இயக்கத் தொடங்குகிறோம். ஆண்ட்டி
வைரஸ், பயர்வால், சிடி பதிதல், மானிட்டர் நிர்வாகம், பி.டி.எப். வியூவர் என இவை பலவகைப்படும். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும், இவை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைப்பதனாலும், இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஒரு சிலர், இவை விண்டோஸ் சிஸ்டத்தில் இல்லாததனால், மற்ற நிறுவனங்கள் தயாரித்துத் தரும்


இவற்றைப் பதிய வேண்டியதுள்ளது என்று எண்ணி இயங்குகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே, இத்தகைய சிஸ்டம் டூல்ஸ் பல தரப்பட்டுள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாம் எதிர்பார்க்கும் பல புதிய டூல்ஸ்கள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் பல்வேறு பயன்பாட்டு புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. ஆண்ட்டி வைரஸ்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்று 

அழைக்கப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று தரப்படுகிறது. எனவே, விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்தவுடன், இன்னொரு நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே தந்து வரும் Microsoft Security Essentials என்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் அப்கிரேட் செய்யப்பட்ட பதிப்பாகும். விண்டோஸ் 7 பயன்படுத்தினால், இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளம் சென்று, இலவசமாகவே இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இன்ஸ்டால் செய்திடும் வேலை இல்லை. சிஸ்டத்துடன் இணைந்தே தரப்பட்டுள்ளது.
2. பயர்வால்: விண்டோஸ் சிஸ்டத்துடன், நீங்கள் வெளி நிறுவனம் ஒன்றின் பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்துவது தேவையற்றது. விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் பயர்வால் புரோகிராம், மற்ற நிறுவனங்கள் தரும் 


பயர்வால் புரோகிராம் செய்திடும் அதே செயல்பாட்டினைத் தருகிறது. தேவையற்ற புரோகிராம்கள், இணைய பயன்பாட்டின் போது குறுக்கிட்டால் தடுக்கிறது. நெட்வொர்க் பைல் பங்கிட்டுக் கொள்கையிலும், இது போன்ற குறுக்கீடுகளைத் தடுத்து, சிஸ்டத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு வராமல் காக்கிறது. இத்தகைய பயர்வால், விண்டோஸ் எக்ஸ்பி எஸ்.பி.2 முதல் தொடர்ந்து தரப்படுகிறது.
3. பார்ட்டிஷன் மேனேஜர்: கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினைப் பிரித்து அமைக்கும் பணிக்கு, நம்மில் பலரும், மற்ற நிறுவனங்கள் தரும் பார்ட்டிஷன் மேனேஜர் புரோகிராம்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், விண்டோஸ் 





சிஸ்டத்தில், டிஸ்க் மேனேஜ்மெண்ட் பார்ட்டிஷன் புரோகிராம் இந்த பணியை மிக நேர்த்தியாக மேற்கொள்ளும். இதன் மூலம் ட்ரைவ் பிரித்தல், சுருக்குதல், விரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Storage Spaces feature என்னும் வசதியை இதே பணிக்கெனப் பயன்படுத்தலாம்.
. டிஸ்க் எழுதுதல்: டிஸ்க்கில் டேட்டா எழுத விண்டோஸ் தரும் பயன்பாட்டு புரோகிராமினை, அநேகமாக அனைவரும் பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளனர். சிலர் அதனை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 





ஏனென்றால், இது எளிமையான வழிகளைக் கையாள் கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஐ.எஸ்.ஓ. பைல்களையும் இதன் மூலம் உருவாக்கலாம். நீரோ போன்ற மற்ற நிறுவனங்களின் புரோகிராம்கள், டிவிடி ட்ரைவுடன் தரப்படும் புரோகிராம்கள் இதற்குத் தேவை இல்லை. ஆடியோ சிடிக்களைத் தயார் செய்திட, விண்டோஸ் மீடியா பிளேயரில் வசதி தரப்பட்டுள்ளது.

5. டிஸ்க் கிளீனிங்: ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்கிச் சுத்தம் செய்திட, நாம் தர்ட் பார்ட்டி புரோகிராம்களையே பயன்படுத்தி வருகிறோம். இதில் முதல் இடம் பெறுவது சிகிளீனர். இலவச புரோகிராம்களில், இது அதிகப் பயன்களைத் தருவதாக உள்ளது. ஆனால், விண்டோஸ் சிஸ்டம் தரும் டிஸ்க் கிளீன் அப் டூல், இதே பணியை மிக நேர்த்தியாக மேற்கொள்கிறது.


விண்டோஸ் 8: சில குறிப்புகள் 27.6.2013


போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் 




ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம். இந்த அப்ளிகேஷன் சில அடிப்படையான வேலைகளை மட்டுமே மேற்கொள்ள நமக்கு வழி காட்டுகிறது. இந்த அப்ளிகேஷனைத் திறந்து, நாம் காட்ட விரும்பும் போட்டோ பைலின் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் அதனை நம் விருப்பப்படி காட்டுகிறோம்.

இதற்கும் மேலாக போட்டோக்களின் மீது வேலைகளை மேற்கொள்ள, மைக்ரோசாப்ட் இலவச அப்ளிகேஷன் புரோகிராமாக Windows Photo Gallery என ஒன்றைத் தந்துள்ளது. இதன் மூலம் போட்டோக்களை நாம் பல இலக்குகளுடன் கையாளலாம். இதனைப் பெற, மைக்ரோசாப்ட் இணைய




 தளம் சென்று Windows Photo Gallery என டைப் செய்து தேடவும். இந்த சாப்ட்வேர் தொகுப்பு, Windows Essentials 2012 என்ற கூட்டுத் தொகுப்பில் ஒரு புரோகிராம் ஆகும். நம் பட பைல்களைத் பெற்று மற்றும் அனுப்பும் வேலையை இந்த சாப்ட்வேர் தானாகவே மேற்கொள்ளும் வகையில் அமைத்திடலாம். நம் டிஜிட்டல் கேமரா குறித்த சில தகவல்களைத் தந்து இதனை செட் செய்திட வேண்டும். போட்டோக்களை அவை எடுக்கப்பட்ட நாள், பைல் அளவு, கேமரா மற்றும் பல பண்பு வகைகளின் அடிப்படையில் பிரித்து அமைக்கலாம். மேலும் ஒவ்வொரு பைலுக்கும், நாம் விரும்பும் தகவல்களை இணைக்கலாம். தலைப்பு கொடுக்கலாம்; அவற்றை அடையாளம் காணும் சொற்களைத் (tags) 




தரலாம். இவ்வாறு தகவல்களை இணைத்துவிட்ட பின்னர், அவற்றை வகைப்படுத்தித் தேடுவது எளிதாகிவிடும். 
இதே சாப்ட்வேர் தொகுப்பு மூலம் படங்களின் அளவை மாற்றலாம். டிஜிட்டல் கேமராக்களில் படங்களை எடுக்கையில் கண்களில் அமையும் சிகப்பு புள்ளிகளை நீக்கலாம். படங்களில் சில டச் அப் வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த வகைகளில், நம் படங்களை நாம் கையாள ஒரு எளிதான சாப்ட்வேர் தொகுப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Photo Gallery நமக்குக் கிடைத்துள்ளது.


லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்க: விண்டோஸ் 8 அதன் லாக் ஸ்கிரீனிலிருந்து தொடங்குகிறது. இதன் தொடக்கமே மிக அழகாக நம்மைக் கவர்கிறது. ஆனால், அடுத்து என்ன செய்திட வேண்டும் என நமக்கு எதுவும் தெரியாமல் அதனையே பார்க்கிறோம். என்ன செய்யலாம்? ஸ்பேஸ் பாரினைத் தட்டுங்கள்; மவுஸ் வீலைச் சற்று சுழற்றுங்கள் அல்லது டச் 




ஸ்கிரீன் என்றால், கீழிருந்து மேலாக விரலால் ஸ்வைப் செய்திடுங்கள். இந்த வேலைகளை மேற்கொண்டால், நமக்கு வழக்கம் போலக் காட்டப்படும் லாக் இன் ஸ்கிரீன் கிடைக்கும். இங்கு நீங்கள் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திடுகையில் அமைத்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை அமைத்து, கம்ப்யூட்டரில் உங்கள் பணியைத் தொடங்குங்கள்.


சில அடிப்படை வசதிகள்: விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பணி இடை முகம் (interface) அனைத்தும் வண்ண வண்ண ஓடுகளால் அமைக்கப்பட்டு, தொடு உணர்தலில் சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கும் வகையில் கிடைக்கின்றன. நீங்கள் டேப்ளட் பி.சி. பயன்படுத்துபவராக இருந்தால், இவை அனைத்தும் 





நேரடியாகவே கிடைக்கும். இடது வலதாகத் திரையில் சுழன்று சென்று, நமக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் டைல் மீது கிளிக் செய்து, அப்ளிகேஷனைப் பெறலாம். டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மவுஸ் வீல் முன் பின்னாகச் சுழற்றி இவற்றைப் பெறலாம். 
இவை இல்லாமல், கீ போர்டினையும் பயன்படுத்தலாம். உங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருக்கையில் Home அல்லது End கீகளைப் பயன்படுத்தி சாப்ட்வேர் டைல்ஸ் அடுக்கப்பட்டுள்ள கட்டமைப்பில் இந்த மூலைக்கும், அந்த மூலைக்குமாகச் செல்லலாம். பின்னர் கர்சர் கீகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட டைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பின்னர், என்டர் அழுத்தி, 





அதனை இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம். 
மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் பெற, விண்டோஸ் கீ அழுத்தவும். ஏதேனும் திறக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதன்மீது ரைட் கிளிக் செய்து, அல்லது ஸ்வைப் செய்து, கிடைக்கும் மெனுவில் Unpin என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிட்ட சில புரோகிராம்களின் டைல்ஸ்களை, ஓர் இடத்திற்குக் கொண்டு வந்து அவற்றை ஒரு குழுவாக அமைக்கலாம்.


























30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம்


இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில்
அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய 




பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 





நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டெகாபோ ஏரியின் அருகே இருந்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம், இணைய தொடர்பு கிடைக்க இயலாத, பூமியின் பல இடங்களில் வாழும் 480 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்க இருக்கிறது. 






லூன் திட்டம் (Loon Project) என அழைக்கப்படும் இந்த திட்டம், தொலைவான இடங்களில் வாழும் அனைவருக்கும், எப்படியேனும், இணைய இணைப்பினைத் தரும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய பலூன்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்டு, இணைய இணைப்பு தருவதற்கான 
ட்ரான்ஸ்மீட்டர் சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 30 பலூன்கள், பூமிக்கு மேலே 12 மைல் தூரத்தில், ஸ்ட்ராட்டோ ஸ்பியர் என அழைக்கப்படும் பகுதியில் பறக்கவிடப்படும். இவற்றின் விட்டம் 49 அடி. 780 ச.மைல் அல்லது 1,250ச. கிலோ மீட்டர், பரப்பில் வாழும் மக்களுக்கு, ஒவ்வொரு பலூனும் இணைய இணைப்பினை வழங்க முடியும். இந்த பலூன்கள், கூகுள் எக்ஸ் சோதனைச் சாலையில், கூகுள் கிளாஸ் மற்றும் கூகுள் ட்ரைவர் இல்லாமல் இயங்கும் கார் ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள், இணைய இணைப்பிற்கென, பைபர் கேபிள்களை அமைப்பதற்கான செலவினை மேற்கொள்வது கடினம் என்பதால், இந்த ஏற்பாட்டினை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைய பலூன்கள், மிக மெல்லிய பாலிதைலீன் பிலிம் கொண்டு 




உருவாக்கப்பட்டவை. 
நியூசிலாந்தின் தெற்கு ஏரி அருகே இருந்து அனுப்பப்பட்ட இவை, வெகு எளிதாக, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றதாக, இதனை அனுப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை நம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் பறந்து இணைய இணைப்பினை வழங்கி வருகின்றன. இதில் இணைக்கப்பட்டுள்ள, சிறிய டேபிள் அளவில் உள்ள சோலார் பேனல்கள், இவை செயல்படுவதற்குத் தேவையான மின் சக்தியை நான்கு மணி நேரத்தில் பெற்று தருகின்றன. தரையில் அமைக்கப்பட்டுள்ள இணையக் கட்டமைப்பில் செயல்படும் மையங்களிலிருந்து, இந்த இணைய பலூனில் உள்ள ரிசீவர்களுக்குத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு பலூனும், 780 சதுர மைல் அளவில், இணையத் தகவல்களை வழங்குகின்றன. அது மட்டுமின்றி, ஒரு பலூனிலிருந்து, அதிக பட்சம் ஐந்து பலூன்களுக்குத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. ஸ்ட்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும், குறிப்பிட்ட விண் எல்லையில், இந்த பலூன்கள் சென்று செயல்படத் 





தொடங்குகையில், மனிதனின் கண்களுக்கு இவை புலப்படாது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால், விண் வெளியில், ஓர் இணைய இணைப்புக் கட்டமைப்பு ஏற்படுகிறது. 
இதன் மூலம் உலகின் அனைத்து மூலைகளுக்கும் இணைய தொடர்பினை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானின், மிக ஆழமான, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அங்கு வசிக்கும் மக்களையும், இந்த பலூன் வெளிப்படுத்தும் சிக்னல்கள் எளிதாக அடைய முடிந்தன. நூற்றுக்கு நான்கு பேர் மட்டுமே இணைய இணைப்பு தற்போது பெற்று வரும், கேமரூன் நாடு முழுவதும், இந்த பலூன்கள் இணைய இணைப்பினைத் தந்தன. பைபர் கேபிள்களை அமைத்து இணைய இணைப்பினை வழங்குவதைக் காட்டிலும், பரந்து விரிந்த ஆகாயத்தைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், உலகம் முழுமைக்கும் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற இலக்குடன் இந்த பலூன் இணைய இணைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல நூறு இணைய பலூன்களை, விண்வெளியில், வளையங்களாக நிற்க வைத்து, இணைப்பு கொடுத்து, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இணைய இணைப்பு வழங்குவதே, இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என 




இத்திட்டத் தலைவர் மைக் கேசிடி குறிப்பிட்டுள்ளார். 
இந்த திட்டத்தின் செயல்பாட்டினை சோதனை செய்திட, உலகின் பல இடங்களில் இருந்து, தன்னார்வ இணையப் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் வீடுகளில், பாஸ்கட் பால் அளவிலான, சிகப்பு ரிசீவர்கள் பொருத்தப்பட்டன. பயனாளர்களுக்குத் திட்டத்தின் முழு விபரமும் வழங்கப்படவில்லை. இணைய இணைப்பு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களே திரட்டப்பட்டன.
இந்த இணைய பலூன்கள், 3ஜி தகவல் வேகத்தைக் கொண்டுள்ளன. உலகில், மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் பேரிடர் காலங்களில், இந்த இணைய இணைப்பு பலூன்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வது எளிதாகும். இதனால் உயிர் இழப்பு தடுக்கப்படும்.
இவ்வகை இணைப்பின் மூலம், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், கூகுள் போன்ற இணைய விளம்பர நிறுவனங்களின் வருமானம் பெருகும். இந்த திட்டத்தில், எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கூகுள் அறிவிக்கவில்லை. 
பதினெட்டு மாத கடும் உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த இணைய பலூன்களின் செயல்பாடு சாத்தியமாகியுள்ளது. 
கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த பலூன்கள் ஏவப்பட்டன. இந்த இடம் இந்த திட்டத்திற்கேற்ற இடமாக, கூகுள் தேர்ந்தெடுத்தது. 2011 ஆம் ஆண்டு, ஏற்பட்ட நில அதிர்வில், இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், உலகின் மற்ற இடங்களுடன் தொடர்பற்ற நிலையில், பல வாரங்கள் வாழ்ந்தனர். நில அதிர்வில், 185 பேர் பலியாயினர். இது போன்ற பேரிடர் நிகழ்வுகளில், இணைய பலூன் இணைப்பு செயல்பட்டு, மக்கள் இறப்பதைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய தகவல்களையும், உதவியையும் வழங்க இயலும்.