விண்டோஸ் 8 ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்


விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுதுமாறு, மென்பொருள் வல்லுநர்களுக்கு, முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினைத் தன் விண்டோஸ் 8 ஸ்டோர் தளத்தில் பதிந்து கொண்டு வழங்க அனுமதித்தது. சில நாட்களுக்கு முன், இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்கள் இவ்வளவு விரைவில், இந்த எண்ணிக்கையை அடையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் ஸ்டோர் திறக்கப்பட்டு எட்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை அடையப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை அடைய ஓர் ஆண்டுக்கும் மேலானது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு அதற்கும் மேல் ஆனது. 
ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான ஸ்டோரில் தற்போது 8 லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு மேலாக உள்ளது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள் ஐ பேட் சாதனத்திற்கானதாகும். இதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களும் மிக அதிகமாகும். 
எந்த வகையில் பார்த்தாலும், விண்டோஸ் ஸ்டோர் பெற்ற இந்த ஒரு லட்சம் புரோகிராம்கள் ஒரு பெரிய சாதனைதான். மைக்ரோசாப்ட் நிறுவன சரித்திரத்தில் இது என்றும் பேசப்படும்.நாளொன்றுக்கு சராசரியாக 600க்கும் மேற்பட்ட புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் விண்டோஸ் ஸ்டோர் தளத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால், மைக்ரோசாப்ட் வெற்றியில் இது ஒரு பகுதிதான்.
டெஸ்க்டாப் சிஸ்டம் என்று வருகையில், இன்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தினை யாரும் நெருங்க முடியவில்லை. 91 சதவீதப் பங்கினை இந்தப் பிரிவில் மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.