விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் - part 2

6. ஸ்டார்ட் அப் மேனேஜர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய டூலாக ஸ்டார்ட் அப் மேனேஜர் (Startup Manager) தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டர்
இயங்கத் தொடங்கியவுடன், செயல்படத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலைப் பெற்று, அவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை நீக்கிவிடலாம். இதற்கு முன் வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், எம்.எஸ். கான்பிக் டூல் மூலம் நாம் இந்த பணியினை மேற்கொண்டு 
வருகிறோம். இந்த வேலையை, மேலே குறிப்பிட்ட சிகிளீனர் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
7. மல்ட்டிபிள் மானிட்டர் டூல்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை இணைத்து இயக்கும் வசதி தரப்பட்டுள்ளது. மற்ற சிஸ்டங்களில், இதற்கென வேறு நிறுவனங்களின் புரோகிராம்களையே பயன்படுத்த வேண்டும். தற்போது இது சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்தே கிடைக்கிறது.
8. பைல் காப்பி: விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டம் பதிப்புகளில், பைல்களைக் காப்பி செய்வதில் கூடுதல் வசதிகளுக்கு, டெரா காப்பி (Tera Copy) என்ற புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், ஒரு பைல் காப்பி செய்யப்படுவதனை, இடையே நிறுத்தி தொடரலாம். மேலும் பல செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் டூல் (முன்பு விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைக்கப்பட்டது), இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் வசதியைத் தருகிறது.
9. டாஸ்க் மேனேஜர்: விண்டோஸ் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டூலுக்குப் பதிலாகத் தற்போது Process Explorer என்ற கூடுதல் செயல்பாடுகளைத் தரும் டூல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பைலும் எப்படி தொடர்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளன என்பதனை, மரக்கிளைகள் கொண்ட பட அமைப்பு மூலம் காட்டுகிறது. கூகுள் குரோம் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகையில், இது நமக்கு கூடுதல் தகவல்களைத் தருவதாக அமைகிறது.
10. பி.டி.எப். பைல் ரீடர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒரு பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது பி.டி.எப். எக்ஸ்சேஞ் வியூவர் போன்ற மற்ற பி.டி.எப். ரீடர் புரோகிராம்களைப் பதிந்து பயன்படுத்தத் தேவை இல்லை. மேலும், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களிலும் இது போன்ற பி.டி.எப். ரீடர்கள் இணைந்து தரப்பட்டுள்ளதால், அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
11. விர்ச்சுவல் மெஷின்: இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கு இடையூறு தராமல், வேறு ஒரு சிஸ்டம் அல்லது புரோகிராம் இயக்கிப் பயன்படுத்த, விர்ச்சுவல் மெஷின் எனப்படும் டூல் தேவைப்படுகிறது. இதுவரை, இதனைப் பெற, விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம்.வேர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி வந்தோம். இவற்றிற்குப் பதிலாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் HyperV என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, உபுண்டு போன்ற புரோகிராம்களை இயக்கலாம்.
12. பேக் அப் டூல்ஸ்: மிக நவீன பேக் அப் டூல்ஸ்களை விரும்புபவர்கள், விண்டோஸ் அல்லாத வேறு நிறுவன டூல்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இத்தகைய டூல் கிடைக்கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் அண்ட் ரெஸ்டோர் வசதி என இது தரப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி பைல் ஹிஸ்டரி (File History) எனத் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் டூல்ஸ் மூலமும் இந்தப் பணியினை மேற்கொள்ளலாம்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இணைக்கப் பட்டிருந்தாலும், பயனாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, அல்லது பிற நிறுவனங்களின் இணையான புரோகிராம்கள் அளவிற்கு, இவை அதிக வசதிகளைத் தராதவையாக இருக்கலாம். எனவே, கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், தர்ட் பார்ட்டி புரோகிராம்களையும் பயன்படுத்தலாம்.