பிரவுசர் சந்தையில் கூகுள் குரோம் முதலிடம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரவுசர் உலகில் நுழைந்தது குரோம் பிரவுசர். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம்.
ஆறே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாளாராய் கூகுள் நின்றது. தொடர்ந்து குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அண்மையில், இணைய செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) குரோம் பிரவுசர் தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதுவும் மிக அதிகமான எண்ணிக்கை வித்தியாசத்தில் இந்த முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. ஜூன் மாதம் இறுதியாகக் கிடைத்த தகவல்களின் படி, குரோம் உலகாளவிய அளவில், 43 சதவீத இணையப் பயனாளர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 25 சதவீத வாடிக்கையாளர்களையே, தன்னிடத்தில் வைத்துள்ளது. பயர்பாக்ஸ், ஏறத்தாழ 20 சதவீதம் பேருக்கே சேவை செய்து வருகிறது. அடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில், சபாரி மற்றும் ஆப்பரா உள்ளன. 
குரோம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஸ்டேட் கவுண்ட்டர் கண்டறிந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கலாம். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தரும் பிரவுசரை அதிகம் பயன்படுத்துவோர் வர்த்தக நிறுவனங்களே. வார இறுதி நாட்களில் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நிச்சயம் குறைவாகவே தான் இருக்கும். இவர்களும், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் எனச் சென்றால், மைக்ரோசாப்ட் பிரவுசரின் பயனுறைநாள் எண்ணப்படும் காலம் விரைவில் வரும். 
குரோம் பிரவுசர் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தது எவ்வாறு என அறிய சிலருக்கு ஆவலாக இருக்கலாம். மைக்ரோசாப்ட் இந்த பிரிவில், யாரும் போட்டிக்கு வர முடியாத நிலையில் இருந்து வந்தது. சற்று வேகமும், நான் எண்ணுகிறபடி வளைக்கக் கூடிய யூசர் இண்டர்பேஸ் அமைந்த பிரவுசரை மக்கள் தேடிய போது, பயர்பாக்ஸ் கிடைத்தது. ஆனால், குரோம் வந்த பின்னர், அதுவும் மாறியது. மொபைல் சாதனங்களில், ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்புடன் கிடைக்கப்பெற்ற குரோம் பிரவுசரை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியதால், குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்ந்தது. இதனுடன் வேகம், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பிற்கேற்ப தரப்படும் வசதிகள், குரோம் பிரவுசருக்கு இந்த இடத்தைக் கொடுத்துள்ளன.


ஒரு மாதத்தில் அதிகம் வாசித்த பதிவுகள் - 21/7/2013

21/7/2013

25 கோடி வாடிக்கையாளருடன் வாட்ஸ் அப்


இணையத்தில் மெசேஜ் அனுப்பிப் பெறுவதில் மிக வேகமாக இயங்கும் வாட்ஸ் அப் (WhatsApp) அமைப்பில், 25 கோடி பயனாளர்கள் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக 25 கோடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் 20 கோடி பேர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளது. எனவே ஆன்லைன் மெசேஜ் சேவையில், அதிக எண்ணிக்கையுடன் செயல்படும் வாடிக்கையாளர்களைக் கொண்ட சேவையாக வாட்ஸ் அப் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்கைப் தளத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாகும். வாட்ஸ் அப் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளே ஆவதால், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது.
வாட்ஸ் அப் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கிடைக்கிறது. நன்றாகவும் செயல்படுகிறது. நோக்கியாவின் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் கூட வாட்ஸ் அப் வசதி இயங்குகிறது. எந்தவித சிரமமும் இன்றி, இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை இணைத்து அனுப்புவது மிக எளிதான ஒன்றாகும். ஸ்மார்ட் போன் விற்பனை உலகளாவிய அளவில், குறிப்பாக இந்தியாவில், பெருகி வருவதால், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகிட வாய்ப்புகள் உள்ளன.

விண்டோஸ் 8 ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்


விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுதுமாறு, மென்பொருள் வல்லுநர்களுக்கு, முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினைத் தன் விண்டோஸ் 8 ஸ்டோர் தளத்தில் பதிந்து கொண்டு வழங்க அனுமதித்தது. சில நாட்களுக்கு முன், இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்கள் இவ்வளவு விரைவில், இந்த எண்ணிக்கையை அடையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் ஸ்டோர் திறக்கப்பட்டு எட்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை அடையப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை அடைய ஓர் ஆண்டுக்கும் மேலானது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு அதற்கும் மேல் ஆனது. 
ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான ஸ்டோரில் தற்போது 8 லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு மேலாக உள்ளது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள் ஐ பேட் சாதனத்திற்கானதாகும். இதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களும் மிக அதிகமாகும். 
எந்த வகையில் பார்த்தாலும், விண்டோஸ் ஸ்டோர் பெற்ற இந்த ஒரு லட்சம் புரோகிராம்கள் ஒரு பெரிய சாதனைதான். மைக்ரோசாப்ட் நிறுவன சரித்திரத்தில் இது என்றும் பேசப்படும்.நாளொன்றுக்கு சராசரியாக 600க்கும் மேற்பட்ட புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் விண்டோஸ் ஸ்டோர் தளத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால், மைக்ரோசாப்ட் வெற்றியில் இது ஒரு பகுதிதான்.
டெஸ்க்டாப் சிஸ்டம் என்று வருகையில், இன்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் சிஸ்டத்தினை யாரும் நெருங்க முடியவில்லை. 91 சதவீதப் பங்கினை இந்தப் பிரிவில் மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் 83 சதவீத இந்திய India மாணவர்கள்



இணையற்ற ஒரு தொழில் நுட்ப புரட்சியில், அதனால் ஏற்படும் மாற்றங்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும்
பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 15 கோடியை எட்டியுள்ளது. சீனா (57.5 கோடி) அமெரிக்காவினை (27.4 கோடி) அடுத்து, மூன்றாவதான இடத்தை இந்தியா எட்டியுள்ளது. அண்மையில் டாட்டா கன்சல்டன்சி சேவை (டி.சி.எஸ்.) நிறுவனம், 17 ஆயிரம் மாணவர்களுக்கும் மேலானவர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுக@ள இங்கு தரப்படுகின்றன. இந்திய மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில், நான்கில் ஒருவர், தங்கள் மொபைல் போன்களில், இன்டர்நெட் பிரவுஸ் செய்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் 1 முதல் 2 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். 72 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன் வழி இணையப் பயன்பாடு, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால், சிறிய நகரங்களில், இணைய இணைப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பதால், அங்கு வசிக்கும் மாணவர்கள், இன்னும் இன்டர்நெட் மையங்களிலேயே இணையத் தேடலை மேற்கொள்கின்றனர். சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இயங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வி கற்றுத் தரும் முறையினை, டிஜிட்டல் மயமாக மாற்றினாலும், 83 சதவீத மாணவர்கள் இணைய உலாவிற்கு வீடு அல்லது இன் டர்நெட் மையங்களையே விரும்புகின்றனர்.
இது இன்டர்நெட், மொபைல் மற்றும் சமுதாய இணைய தளங்களின் காலமாக மாறிவிட்டது. மாணவர்கள் உட்பட, பலரும் மக்களைச் சந்திக்கும் இடமாக, சமுதாய இணைய தளங்கள் மாறி வருகின்றன. ஒவ்வொரு சமுதாய இணைய தளமும் அதன் தன்மைக்கேற்ப, தன் மக்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 83.38 சதவீத மாணவர்கள் பேஸ்புக் இணைய தளத்தில் தங்களைப் பதிந்துள்ளனர். இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற சமூக இணைய தளங்களான ட்விட்டர், லிங்க்டு இன் மற்றும் ஆர்குட் போன்றவை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. இருப்பினும் லிங்க்டு இன் போன்ற தளங்கள், மெட்ரோ நகரங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்கையில், மெட்ரோ மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மாணவர்களின் மன நிலையையும் விரும்பும் விஷயங்களையும் அறிய முடிகிறது.
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களையே தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள, 73.68 சதவீத இந்திய மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இப்போது மின் அஞ்சல் பயன்பாடு, இதனால் தொடர்ந்து குறைந்து வருகின்றது.
பத்தில் நான்கு மாணவர்கள் இணையம் வழி பொருட்கள் வாங்குவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். கிரெடிட் கார்ட் மட்டுமின்றி, டெபிட் கார்ட், நெட் பேங்கிங், பொருள் வழங்கும்போது பணம் எனப் பல வசதிகளை ஆன்லைன் ஷாப்பிங் மையங்கள் அளிப்பதால், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால், இந்திய மாணவர்களிடையே எந்த எந்த பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கும் பழக்கம் உள்ளது என்பதனைப் பார்க்கையில், அது இடத்திற்கேற்ற வகையில் வேறுபடுகிறது. மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவது திரைப்படங்களுக்கான அனுமதிச் சீட்டுகளே. 61.71 சதவீத இந்திய இணைய மாணவர்கள், திரைப்பட டிக்கட்களை இணையம் வழியாகவே வாங்குகின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், மெட்ரோ நகர மாணவர்களைக் காட்டிலும், சிறிய நகரங்களில் வாழும் மாணவர்களே, அதிகம் டிக்கட்களைப் பெறுகின்றனர். அடுத்ததாக, இணையத்தில் மாணவர்கள் அதிகம் வாங்குவது டிவிடி/ நூல்கள் மற்றும் மியுசிக் சாதனங்களே. இதனை அடுத்து வருவது விமான மற்றும் ட்ரெயின் டிக்கட்களாகும்.
இந்திய மாணவர்கள் இணையத்தில் அதிகம் மேற்கொள்ளும் செயல்பாடு எது? 74 சதவீத மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த ஆய்வு குறித்த தகவல்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். 62.35 சதவீத மாணவர்கள் இணையம் வழி அரட்டை, வலைமனை வழி தகவல் பரிமாற்றம், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
49.10 சதவீத மாணவர்கள் மின் அஞ்சலுக்கும், 45.47 சதவீத மாணவர்கள் இசை சார்ந்த கோப்புகளை டவுண்லோட் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், டாட்டா கன்சல்டன்சி நிறுவனம், டி.சி.எஸ். ஜென் ஒய் சர்வே 2012 என்ற தலைப்பில், இந்தியாவின் 12 நகரங்களில், 17,478 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்விலிருந்து அறியப்பட்ட தகவல்களாகும். இந்த ஆய்வு, ஆகஸ்ட் 2012 முதல், டிசம்பர் 2012 வரை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1660 பள்ளிகளில் படிக்கும் 12 முதல் 18 வயதான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்!


இன்றைய கம்ப்யூட்டர்களின் தொடக்க காலத்தில், மவுஸ் உட்பட பல்வேறு சாதனங்களை வடிவமைக்கக் காரண கர்த்தாவாக இருந்த எங்கல்பர்ட் (Doug
Engelbart), சென்ற ஜூலை 2ல், தன் 88 ஆவது வயதில் மரணமடைந்தார். 1950 முதல் 1960 வரை, "கம்ப்யூட்டர் உலகின் தீர்க்கதரிசி" எனப் பாராட்டும் புகழும் பெற்றவர் எங்கல்பர்ட். மனிதனின் நுண்ணறிவை வளப்படுத்துவதில், கம்ப்யூட்டர் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்ளும் எனவும், உலகப் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, அவற்றிற்குத் தீர்வு காண கம்ப்யூட்டர் பயன்படும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் அவர்.
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பேசப்படும் ஹைப்பர் டெக்ஸ்ட், ஸ்கிரீன் பகிர்மாணம், பல விண்டோ செயல்பாடு, வீடியோ டெலி கான்பரன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் துணை சாதனமாக மவுஸ் -- ஆகியவற்றைக் கொண்டு வர முழு முதற் காரணமாக இருந்தது எங்கல்பர்ட் மேற்கொண்ட ஆய்வுகளே. 
அவர் கண்டுபிடித்து வடிவமைத்த மவுஸ், கம்ப்யூட்டரின் பயன்பாட்டினையே மாற்றி அமைத்தது. 1960 ஆம் ஆண்டு மவுஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய எங்கல்பர்ட், 1963ல் அதனை வடிவமைத்தார். 1968ல், சான் பிரான்சிஸ்கோவில், முதல் முதலாக, பொதுமக்களுக்கு மவுஸினை இயக்கிக் காட்டினார். அப்போதே, வீடியோ டெலி கான்பரன்சிங் என்பதை நடத்திக் காட்டினார். அதுவே, இன்டர்நெட்டின் அடிப்படையாக அமைந்தது. 
1970ல் மவுஸ் சாதனத்திற்கான வடிவமைப்பு உரிமையைப் பெற்றார். தொடக்கத்தில், மரத்தாலான ஷெல் ஒன்றில், இரு உலோக உருளைகளை அமைத்து மவுஸ் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக, இன்றைய வடிவமைப்பினைப் பெற்றது. 
இதன் பயனைப் பலமுறை அவர் விளக்கிக் காட்டினாலும், 1984ல் ஆப்பிள் நிறுவனம் தான் முதன் முதலில் வர்த்தக ரீதியாக மவுஸை மக்களிடம் கொண்டு சேர்த்தது. 1987 ஆம் ஆண்டில் மவுஸ் வடிவமைப்பு உரிமை காலம் காலாவதியானதால், பொது பயன்பாட்டு சாதனமாக மவுஸ் மாறியது. மவுஸுக்கான எந்த ராயல்டி உரிமைப் பணமும் எங்கல்பர்ட் பெற்றதே இல்லை. 1980 ஆம் ஆண்டு மத்தியிலேயே, நூறு கோடி மவுஸ் புழக்கத்தில் இருந்தது என்றால், அவர் எவ்வளவு தொகையை விட்டுக் கொடுத்துள்ளார் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு இதன் வடிவமைப்பினை வழங்கிய ஸ்டான்போர்ட் ஆய்வு மையம், இதற்கென 1983ல், 40 ஆயிரம் டாலர் பணம் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இவருக்கென ஓர் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, பல ஆய்வுகளை அதில் இவர் மேற்கொண்டார். இன்றைய இன்டர்நெட் வடிவமைப்பின் முன்னோடியான ஆர்பா நெட் (ARPANET) அமைப்பினை வடிவமைப்பதில் பெரும் பங்கு கொண்டார். அப்போதே, மின் அஞ்சல், வேர்ட் ப்ராசசிங் ஆகிய பிரிவுகளில், முன்னோட்டமான கருத்துகளையும் செயல்முறைகளையும் வழங்கினார். கம்ப்யூட்டர் ஒன்று பெரிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு, தகவல்கள் மிகப் பெரிய துளையிட்ட அட்டைகள் வழியாகத் தரப்பட்டுச் செயல்பட்ட காலத்தில், அவர் வழங்கிய ஆய்வு இலக்குகள் எல்லாம், மிக மிக முன்னேறிய ஒரு காலத்தில் தான் வர முடியும் என உடன் இருந்தவர்கள் அப்போது கூறினார்கள். இன்று அவை நடைமுறையில் இருப்பதைக் காண்கையில் அவரை "கம்ப்யூட்டிங் தீர்க்கதரிசி" என அழைத்தது சரிதான் என்று கொள்ள வேண்டும். 
கம்ப்யூட்டர் மற்றும் மனித நுண்ணறிவு வளம் குறித்து 25 நூல்களை இவர் எழுதினார். 20 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையினைப் பெற்றிருந்தார்.
1997ல், எம்.ஐ.டி. பல்கலை, இவருக்கு விருதாக 5 லட்சம் டாலர் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டிங் பிரிவில் சில அடிப்படைகளை வடிவமத்ததற்காக, தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது (National Medal of Technology) 2000 ஆண்டில் வழங்கப்பட்டது.
மனிதன் மற்றும் கம்ப்யூட்டர் இடையே ஓர் அருமையான உறவினை ஏற்படுத்தக் காரணமாக இருந்ததற்காகவும், மவுஸினை சிறந்த உள்ளீடு சாதனமாக அமைத்ததற்காகவும், கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம், இவருக்கு 2005 ஆம் ஆண்டில், பெல்லோஷிப் விருதினை வழங்கி கவுரவித்தது

விண்டோஸ்: உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் - part 2

6. ஸ்டார்ட் அப் மேனேஜர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய டூலாக ஸ்டார்ட் அப் மேனேஜர் (Startup Manager) தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டர்
இயங்கத் தொடங்கியவுடன், செயல்படத் தொடங்கும் புரோகிராம்களின் பட்டியலைப் பெற்று, அவற்றில் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை நீக்கிவிடலாம். இதற்கு முன் வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், எம்.எஸ். கான்பிக் டூல் மூலம் நாம் இந்த பணியினை மேற்கொண்டு 
வருகிறோம். இந்த வேலையை, மேலே குறிப்பிட்ட சிகிளீனர் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
7. மல்ட்டிபிள் மானிட்டர் டூல்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை இணைத்து இயக்கும் வசதி தரப்பட்டுள்ளது. மற்ற சிஸ்டங்களில், இதற்கென வேறு நிறுவனங்களின் புரோகிராம்களையே பயன்படுத்த வேண்டும். தற்போது இது சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்தே கிடைக்கிறது.
8. பைல் காப்பி: விண்டோஸ் 7 மற்றும் முந்தைய சிஸ்டம் பதிப்புகளில், பைல்களைக் காப்பி செய்வதில் கூடுதல் வசதிகளுக்கு, டெரா காப்பி (Tera Copy) என்ற புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், ஒரு பைல் காப்பி செய்யப்படுவதனை, இடையே நிறுத்தி தொடரலாம். மேலும் பல செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் டூல் (முன்பு விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைக்கப்பட்டது), இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் வசதியைத் தருகிறது.
9. டாஸ்க் மேனேஜர்: விண்டோஸ் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டூலுக்குப் பதிலாகத் தற்போது Process Explorer என்ற கூடுதல் செயல்பாடுகளைத் தரும் டூல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பைலும் எப்படி தொடர்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளன என்பதனை, மரக்கிளைகள் கொண்ட பட அமைப்பு மூலம் காட்டுகிறது. கூகுள் குரோம் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகையில், இது நமக்கு கூடுதல் தகவல்களைத் தருவதாக அமைகிறது.
10. பி.டி.எப். பைல் ரீடர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஒரு பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது பி.டி.எப். எக்ஸ்சேஞ் வியூவர் போன்ற மற்ற பி.டி.எப். ரீடர் புரோகிராம்களைப் பதிந்து பயன்படுத்தத் தேவை இல்லை. மேலும், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களிலும் இது போன்ற பி.டி.எப். ரீடர்கள் இணைந்து தரப்பட்டுள்ளதால், அவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.
11. விர்ச்சுவல் மெஷின்: இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கு இடையூறு தராமல், வேறு ஒரு சிஸ்டம் அல்லது புரோகிராம் இயக்கிப் பயன்படுத்த, விர்ச்சுவல் மெஷின் எனப்படும் டூல் தேவைப்படுகிறது. இதுவரை, இதனைப் பெற, விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம்.வேர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தி வந்தோம். இவற்றிற்குப் பதிலாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் HyperV என்ற புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, உபுண்டு போன்ற புரோகிராம்களை இயக்கலாம்.
12. பேக் அப் டூல்ஸ்: மிக நவீன பேக் அப் டூல்ஸ்களை விரும்புபவர்கள், விண்டோஸ் அல்லாத வேறு நிறுவன டூல்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுப் பயன்படுத்துகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இத்தகைய டூல் கிடைக்கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் அண்ட் ரெஸ்டோர் வசதி என இது தரப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி பைல் ஹிஸ்டரி (File History) எனத் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பேக் அப் டூல்ஸ் மூலமும் இந்தப் பணியினை மேற்கொள்ளலாம்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் சிஸ்டத்திலேயே இணைக்கப் பட்டிருந்தாலும், பயனாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, அல்லது பிற நிறுவனங்களின் இணையான புரோகிராம்கள் அளவிற்கு, இவை அதிக வசதிகளைத் தராதவையாக இருக்கலாம். எனவே, கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், தர்ட் பார்ட்டி புரோகிராம்களையும் பயன்படுத்தலாம்.

விண்டோஸ்8 : உள்ளடக்கிய சிஸ்டம் டூல்ஸ் 3.7.2013

விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் இயங்கத் தொடங்கியவுடன், பிற நிறுவனங்கள், இதில் இயங்கும் வகையில் தயாரித்து வெளியிட்டுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்களை நாம் பதிந்து இயக்கத் தொடங்குகிறோம். ஆண்ட்டி
வைரஸ், பயர்வால், சிடி பதிதல், மானிட்டர் நிர்வாகம், பி.டி.எப். வியூவர் என இவை பலவகைப்படும். இவை அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதாலும், இவை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைப்பதனாலும், இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஒரு சிலர், இவை விண்டோஸ் சிஸ்டத்தில் இல்லாததனால், மற்ற நிறுவனங்கள் தயாரித்துத் தரும்


இவற்றைப் பதிய வேண்டியதுள்ளது என்று எண்ணி இயங்குகின்றனர். ஆனால், விண்டோஸ் சிஸ்டத்திலேயே, இத்தகைய சிஸ்டம் டூல்ஸ் பல தரப்பட்டுள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில், நாம் எதிர்பார்க்கும் பல புதிய டூல்ஸ்கள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் பல்வேறு பயன்பாட்டு புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. ஆண்ட்டி வைரஸ்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Windows Defender என்று 

அழைக்கப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று தரப்படுகிறது. எனவே, விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்தவுடன், இன்னொரு நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைத் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே தந்து வரும் Microsoft Security Essentials என்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் அப்கிரேட் செய்யப்பட்ட பதிப்பாகும். விண்டோஸ் 7 பயன்படுத்தினால், இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளம் சென்று, இலவசமாகவே இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இன்ஸ்டால் செய்திடும் வேலை இல்லை. சிஸ்டத்துடன் இணைந்தே தரப்பட்டுள்ளது.
2. பயர்வால்: விண்டோஸ் சிஸ்டத்துடன், நீங்கள் வெளி நிறுவனம் ஒன்றின் பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்துவது தேவையற்றது. விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் பயர்வால் புரோகிராம், மற்ற நிறுவனங்கள் தரும் 


பயர்வால் புரோகிராம் செய்திடும் அதே செயல்பாட்டினைத் தருகிறது. தேவையற்ற புரோகிராம்கள், இணைய பயன்பாட்டின் போது குறுக்கிட்டால் தடுக்கிறது. நெட்வொர்க் பைல் பங்கிட்டுக் கொள்கையிலும், இது போன்ற குறுக்கீடுகளைத் தடுத்து, சிஸ்டத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு வராமல் காக்கிறது. இத்தகைய பயர்வால், விண்டோஸ் எக்ஸ்பி எஸ்.பி.2 முதல் தொடர்ந்து தரப்படுகிறது.
3. பார்ட்டிஷன் மேனேஜர்: கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினைப் பிரித்து அமைக்கும் பணிக்கு, நம்மில் பலரும், மற்ற நிறுவனங்கள் தரும் பார்ட்டிஷன் மேனேஜர் புரோகிராம்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், விண்டோஸ் 





சிஸ்டத்தில், டிஸ்க் மேனேஜ்மெண்ட் பார்ட்டிஷன் புரோகிராம் இந்த பணியை மிக நேர்த்தியாக மேற்கொள்ளும். இதன் மூலம் ட்ரைவ் பிரித்தல், சுருக்குதல், விரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Storage Spaces feature என்னும் வசதியை இதே பணிக்கெனப் பயன்படுத்தலாம்.
. டிஸ்க் எழுதுதல்: டிஸ்க்கில் டேட்டா எழுத விண்டோஸ் தரும் பயன்பாட்டு புரோகிராமினை, அநேகமாக அனைவரும் பயன்படுத்தத் தெரிந்து வைத்துள்ளனர். சிலர் அதனை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 





ஏனென்றால், இது எளிமையான வழிகளைக் கையாள் கிறது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஐ.எஸ்.ஓ. பைல்களையும் இதன் மூலம் உருவாக்கலாம். நீரோ போன்ற மற்ற நிறுவனங்களின் புரோகிராம்கள், டிவிடி ட்ரைவுடன் தரப்படும் புரோகிராம்கள் இதற்குத் தேவை இல்லை. ஆடியோ சிடிக்களைத் தயார் செய்திட, விண்டோஸ் மீடியா பிளேயரில் வசதி தரப்பட்டுள்ளது.

5. டிஸ்க் கிளீனிங்: ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்கிச் சுத்தம் செய்திட, நாம் தர்ட் பார்ட்டி புரோகிராம்களையே பயன்படுத்தி வருகிறோம். இதில் முதல் இடம் பெறுவது சிகிளீனர். இலவச புரோகிராம்களில், இது அதிகப் பயன்களைத் தருவதாக உள்ளது. ஆனால், விண்டோஸ் சிஸ்டம் தரும் டிஸ்க் கிளீன் அப் டூல், இதே பணியை மிக நேர்த்தியாக மேற்கொள்கிறது.