வரும் 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை? website

வரும் 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர்





எண்ணிக்கை, தற்போது இருப்பதைக் காட்டிலும் மூன்று மடங்காக உயரும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் 12.5 கோடி இணையப் பயனாளர்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டனர். இது 2016ல் 33 கோடியாக உயரும் எனத் தெரியப்பட்டுள்ளது. BCG என அழைக்கப்படும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்த தகவலைத் தந்துள்ளது. . “From Buzz to Bucks: Capitalizing on India’s “Digitally Influenced” Consumers,” என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை, மேலும் பல ஆர்வமூட்டும் தகவல்களையும் அறிவித்துள்ளது.





1. வேகமாக உயரும் இந்த இணையப் பயனாளர்கள், இந்திய வர்த்தகத்தின் முகத்தையே மாற்ற இருக்கின்றனர். தற்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 40 சதவீதம் பேர், இணையம் வழி வர்த்தகம் மேற்கொள்கின்றனர். இது தொடர்ந்து வேகமாக உயரும். தாங்கள் வாங்க விரும்பிய பொருட்களின் விலை மற்றும் தரத்தினை, இணையம் மூலமாக ஒப்பிட்டு ஆய்வு செய்த பின்னரே, பலர் பொருட்களை வாங்குகின்றனர். இதனால், டிஜிட்டல் உலகத்தின் அழுத்தம் இவர்கள் மீது அதிகமாகவே உள்ளது. அது அவர்களின் செலவினத்தையும் வளர்த்து வரையறை செய்கிறது. வரும் நான்கு ஆண்டுகளில் இதன் தாக்கம் இன்னும் அதிகம் ஆகும்.




25 ஆயிரம் இணைய வர்த்தகப் பயனாளர்களிடம், 101 வெவ்வேறு பொருட்கள் சார்ந்து தகவல்கள் இந்த ஆய்வில் திரட்டப்பட்டன. 
2. ஆண்களில் 32 சதவீதமும், பெண்களில் 12 சதவீதமும் இணையத்தைப் பொருட்கள் வாங்க பயன்படுத்துகின்றனர். இணையம் வழி தாங்கள் கண்டறிந்த முடிவுகளை, ஆண்களில் 14 சதவீதம் பேரும், பெண்களில் 4 சதவீதம் பேரும், அப்படியே ஏற்றுக் கொண்டு அமல்படுத்துகின்றனர்.
3.பெரும்பாலும், அதிக வருவாய் உள்ள குடும்பத்தினரே அதிக அளவில், இணையத்தினை பொருட்கள் வாங்கப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வருமானம் பெறும் மத்திய நிலையில் உள்ளவர்களும் இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர். இவர்களில் 4 சதவீதம் பேர் இணைய வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.





4. இணையத்தில் பொருட்களை வாங்குபவர்களில் 30 சதவீதம் பேர், தாங்கள் வாங்கும் பொருட்களுக்குச் சிறப்பு தள்ளுபடி தரப்படுகிறதா எனத் தேடிப் பார்த்து, அவற்றையே வாங்குகின்றனர். 37 சதவீதம் பேர், வீட்டில் இருந்தபடியே, பொருட்களை வாங்க முடிகிறது என்பதனைப் பெரும் வசதியாக எண்ணுகின்றனர். 29 சதவீதம் பேர், இணையத்தில் மட்டுமே, பொருட்களைத் தேர்ந்தெடுக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாகக் கருதுகின்றனர். கடைவீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் உள்ளவற்றைக் காட்டிலும், அதிக எண்ணிக்கையில் பொருட்களின் வகைகள் இருப்பதாக எண்ணுகின்றனர். இது உண்மையும் கூட.
5.பெரும்பான்மையான இணைய பயனாளர்கள், தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களுக்கு, அவற்றைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் இணைய தளத்தினையே நம்பிப் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பார்த்து தகவல்களைப் பெற்றுக் கொண்டு, பின் மற்ற தர்ட் பார்ட்டி நிறுவனங்களின் இணைய தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் முடிவினை எடுக்கின்றனர்.






தற்போது தள்ளுபடி விலை மற்றும் வீட்டில் இருந்தபடியே வசதியாக பொருட்களை வாங்க இயலுதல் ஆகிய இரு காரணங்களே, இணைய வழி வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றன. தள்ளுபடி விலையை நிறுவனங்கள் தொடர முடியாது. எனவே, தங்கள் சேவையின் தரம், பொருட்களை வழங்குவதில் வேகம் போன்றவற்றின் மூலமே, வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் இழுத்துத் தக்க வைக்க முடியும்.




வர இருக்கும் காலத்தில், கிராமப்புறங்களில் இணையப் பயன்பாட்டினை அரசு தீவிரமாகக் கொண்டு வர இருக்கிறது. வங்கிகளும் அதிக அளவில் கிராமங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, வர்த்தகத்தின் பன்முகத் தன்மை இனி இணையத்தை அடிப்படையாகக் கொண்டே அமையும் வாய்ப்புகள் அதிகம் எனலாம்.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்